Skip to main content

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடரில் இந்த அணிதான் ஆதிக்கம் செலுத்தும்"... இர்ஃபான் பதான் பேச்சு!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

irfan pathan

 

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக டெல்லி அணி இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

 

கடந்த இரு மாதங்களாக அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி அணி, இரண்டாம் இடம் பிடித்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்திலேயே, டெல்லி அணி மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் வலுவாக இருந்த டெல்லி அணி, தொடரின் தொடக்கத்தில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசைப்பட்டியலில் முன்னிலை வகித்தது.

 

பின்னர், அடுத்தத்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகள், டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை சந்தேகத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தின. அதன்பின், போராடி பெற்ற வெற்றிகள் டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும், அடுத்த வருட ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான் டெல்லி அணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "சென்னை அணி முன்னர் எப்படி இருந்ததோ, அதே போல அடுத்த சில ஆண்டுகளுக்கு டெல்லி அணி இருக்கும். சரியான அணியாக டெல்லி அணி அமைந்துள்ளது. சிறந்த கேப்டன் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரு வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இன்னும் இரு விஷயங்களில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிறந்த ஃபினிஷர் தேவைப்படுகிறது. ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் என இரண்டும் அமைந்தால், மிகவும் பலமான அணியாக டெல்லி மாறிவிடும். நல்ல துவக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் கொண்டுள்ளனர். அவர்களது கூடுதல் பலமே அனுபவம் வாய்ந்த நிறைய இளம்வீரர்கள் அணியில் இருப்பதுதான். அடுத்த நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஆதிக்கம் செலுத்தக் கூடிய அணியாக டெல்லி அணி இருக்கும்" எனக் கூறினார்.