Skip to main content

கரோனா அச்சம் - இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து வார்னர் நீக்கம்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020
warner

 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரின்போது, இடுப்பு பகுதியில் காயமடைந்த வார்னர், இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, இருபது ஓவர் தொடர் மற்றும் இரு அணிகளுக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

 

இந்தநிலையில், இந்தியாவுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் வார்னர், அபோட் ஆகியோர் விளையாடமாட்டார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் சிட்னியில் இருவரும் இருப்பதால், அவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 

 

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வார்னர் மற்றும் சீன் அபோட் இருவரும் காயத்திலிருந்து குணமடைவதற்காக  சிட்னியில், அணியின் கரோனா தடுப்பு வளையத்திற்கு வெளியே இருந்தனர். சிட்னியில் கரோனா அதிகமாக இருக்கும் பகுதியில் அவர்கள் இல்லையென்றாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு வளையக் கட்டுப்பாடுகள், அவர்களை அணியில் இணைய அனுமதிக்காது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிட்னியில் அதிகரித்து வரும் கரோனா தோற்றால், வார்னர் மற்றும் சீன் அபோட் ஆகிய இருவரும் மெல்போர்ன் சென்று, உடல் தகுதியை மேம்படுத்தும் பயற்சியில் ஈடுபடுவார்கள் எனவும் ஆஸ்திரேலிய வாரியம் தெரிவித்துள்ளது.