ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்ததோடு, புதிய அணிகளை வாங்குவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டர் அறிவிப்பையும், அதோடு கூடிய அணியை வாங்குவது மற்றும் நடத்துவது தொடர்பான ஆவணங்களையும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது.
இந்தச் சூழலில் டெண்டர் அறிவிப்பு மற்றும் ஆவணங்களை வாங்குவதற்கான கால அவகாசம் கடந்த 20ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளாசர் குடும்பம், இந்த ஐபிஎல் ஆவணங்களை வாங்கியுள்ளதாகவும், இதனால் அவர்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் நேற்று (21.10.2021) தகவல் வெளியானது.
இந்தநிலையில், பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணை, ஐபிஎல் அணி ஒன்றை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியை வாங்குவது தொடர்பான ஆவணங்களை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணை வாங்கியுள்ளதாகவும், ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் அணிகளுக்கான ஏலம், அக்டோபர் 25ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அதானி குழுமம், டோரண்ட் ஃபார்மா, அரபிந்தோ ஃபார்மா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.