2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.