2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதேநேரத்தில், தோனி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதால், அவரால் சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு உடனடியாக இந்தியா வரவில்லை.
இந்தச் சூழலில், உலகக்கோப்பை முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையைத் தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார் எனவும், அந்த விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து தோனி இந்தியா திரும்பியுள்ளதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், இன்று (16.11.2021) முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை அளித்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு.என்.சீனிவாசன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றதையொட்டி 20.11.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்" என கூறப்பட்டுள்ளது.