![IPL](http://image.nakkheeran.in/cdn/farfuture/y2aLfcV2RzN5d-158_y4g0lMdpE1RyoRzpGPOK7vn0M/1596433802/sites/default/files/inline-images/ipl-final-1_1.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 13வது ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனமான 'விவோ'வின் ஸ்பான்சர்ஷிப் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை விலக்காமல் அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அதனையடுத்து இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனையொட்டி நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் போட்டியை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டியை நவம்பர் 10ம் தேதி நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டிகளும் வழக்கமான போட்டி நேரத்தில் இருந்து அரை மணிநேரத்திற்கு முன்னரே தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'விவோ' நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 2022 வரை இருப்பதால் ஸ்பான்சர்ஷிப்பில் விவோ நிறுவனம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதன் எதிர்வினையாக இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அச்சமயத்தில் ஐபிஎல் ஸ்பான்சராக உள்ள சீன நிறுவனமான 'விவோ'வை நீக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக்குழு தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு பல விவாதத்தை கிளப்பியுள்ளது.