இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கியது டிசம்பர் மாதம்தான். ஆனால் அதை பற்றிய விவாதங்கள் அக்டோபர் மாதம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னர் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என ரிக்கி பான்டிங்கும், 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என மெக்ராத்தும் தெரிவித்திருந்தனர்.
முதல் டெஸ்டில் கடும் போட்டிக்கு பிறகு இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி தான் தொடரின் பெரிய திருப்புமுனை. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அட்டகாசமாக இருக்க ஆஸ்திரேலியா அணியால் சிறிதும் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை முற்றிலும் சிதறிப்போனது. நான்காவது போட்டியில் மழை ஆஸ்திரேலியா அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது.
பலவீனமான ஆஸ்திரேலியா அணியை வென்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் தொடருக்கு முன்னர்வரை இரு அணியின் வேகப்பந்து பவுலர்களின் சராசரியை பார்த்தால் ஆஸ்திரேலியா வீரர்களின் பவுலிங் சராசரி சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் பவுலிங் சராசரி: கம்மின்ஸ் 25, ஸ்டார்க் 29, ஹேஸல்வூட் 26. அதேசமயம் வெளிநாடுகளில் இந்திய பவுலர்களின் பவுலிங் சராசரி: சமி 31, இஷாந்த் ஷர்மா 34.
4 போட்டிகள் முடிவில் இரு அணிகளின் பவுலிங் சராசரியிலும் பெரிய வித்தியாசம் இல்லை. கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேஸல்வூட், லயன், சமி, ஜடேஜா, விஹாரி ஆகியோர் 25+ சராசரி கொண்டுள்ளனர். ஆனால், பும்ராஹ் ஒருவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவரின் பவுலிங் சராசரி 17. இதுவே இரு அணிகளின் பவுலிங்கில் பெரிய மாற்றமாக அமைந்தது.
முரளி விஜய் ஆஸ்திரேலியா அணியுடன் கடந்த தொடரில் 4 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 482 ரன்கள், 60.25 சராசரி என இருந்தார். இந்த தொடரில் 2 போட்டிகளில் 49 ரன்கள், 12.25 சராசரியுடன் இருக்கிறார். விராட் கோலி கடந்த தொடரில் 4 போட்டிகளில் 4 சதம் ஒரு அரைசதம் உட்பட 692 ரன்கள், 86.50 சராசரியென இருந்தார். இந்த தொடரில் 4 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 282 ரன்கள், 40.29 சராசரியுடன் இருக்கிறார்.
பேட்டிங்கை பொறுத்தவரை 200+ ரன்களை கோலி, ரஹானே, ஹாரிஸ், ஹெட் ஆகியோர் எடுத்தனர். அதேசமயம் 300+ ரன்களை புஜாரா மற்றும் பண்ட் எடுத்தது இரு அணியின் பேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நல்ல ஃபார்முடன் வந்த கவாஜாவை இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். உண்மையில் ஸ்மித், வார்னர் இந்த தொடரில் விளையாடி இருந்தாலும் இந்திய அணி வென்றிருக்கும். அந்த அளவுக்கு இந்திய அணியின் பவுலிங் மாஸ் காட்டியது. இந்திய அணியின் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது.
தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரியானது 21.42 மட்டுமே. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி 43.85. இந்திய அணியின் மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது தொடக்க ஆட்டக்காரர்களின் பார்ட்னர்ஷிப் மிகக்குறைவாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களில் பவுலர்களின் பேட்டிங் சராசரி 8.07. ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களின் பேட்டிங் சராசரி 18.33.
பேட் கம்மின்ஸ் 446 பந்துகளில் 163 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஸ்டார்க் 212 பந்துகளில் 117 ரன்கள், லயான் 153 பந்துகளில் 83 ரன்கள், ஹஸல்வூட் 122 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால், இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் 100 பந்துகளுக்கும் குறைவாகவே விளையாடியுள்ளனர். இது இந்திய அணி முன்னேற்றம் காணவேண்டிய முக்கிய பகுதி.
டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. இதில் இந்திய அணி சொதப்பியது. ஆஸ்திரேலியா அணி ஓரளவு சிறப்பாக விளையாடியது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய பார்ட்னர்ஷிப் ரன்களை எடுக்கவில்லை. இது அவர்களின் தோல்வியை உறுதி செய்தது.
அஷ்வின், ஃபிட் இல்லாதது, ஆஸ்திரேலியா தொடருக்கு முக்கிய ஆல்-ரவுண்டர் வீரராக கருதப்பட்ட ஹர்டிக் பாண்டியா இல்லாதது, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக சர்வதேச போட்டிகள் விளையாடும் வீரர்கள், 6 மற்றும் 7-வது இடத்தில் விளையாடும் வீரர் யார்? என்ற பல பிரச்சனைகளை தாண்டிதான் இந்திய அணி வெற்றி பெற்றது. 98 டெஸ்ட், 272 வீரர்கள், 29 கேப்டன்கள், 71 வருடங்கள், 31 தொடர்களை கடந்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.
தொடரில் கோலியை சதம் அடிக்க விடமாட்டோம் என கம்மின்ஸ் சவால் விடுத்தார். இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் சதம் 5, ஆஸ்திரேலியா அணி வீரர்களின் சதம் 0 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மாதங்கள் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி இல்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளின்போது தான் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று தனது டெஸ்ட் ஸ்கில்களை அதிகரிப்பேன் என தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியுள்ளார்.