மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி- 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்த நோட் புக் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் எதனால் அப்படி ஒரு கொண்டாட்டம் என கோலி விளக்கமளித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணிக்கு இடையேயான முதலாவது டி- 20 போட்டி நேற்று ஹைராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 94 ரன்கள் விளாசினார். இதனிடையே வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, வில்லியம்ஸ் கொண்டாடும் ‘நோட் புக்’ ஸ்டைலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆட்டத்திற்கு பின் இதுகுறித்து பேசிய அவர், “2017 ல் ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின் போது நான் நோட் புக் கொண்டாட்டத்துடன் வழி அனுப்பப்பட்டேன். அதனால் அதை இன்று நான் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனவேதான் நோட்புக்கில் சில டிக்குகளை செய்தேன். எனினும் ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கைக் குலுக்கிக்கொண்டோம். அதுதான் கிரிக்கெட். களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போதும் மதிப்பு அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். களத்தில் கோலி கொடுத்த பதிலடியும், அதன் பின்னர் அதுகுறித்து அவர் கொடுத்த பதிலும் ரசிகர்களின் பாராட்டை வெகுவாக சம்பாதித்துள்ளது.