4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 9 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்வி மற்றும் 2 வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. மேலும், 33 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து, உலகக்கோப்பை தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தார். மேலும், அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜூனா ரணதுங்காவை நியமித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றிருந்தனர். அதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கமளித்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், “பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது பதவியை பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கும், இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரத்தில் உள்ள ஜெய்ஷா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்க முயற்சிக்கிறார். இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் (ஜெய்ஷா) இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தை அமித் ஷாவால் மட்டுமே ஜெய்ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்” என தெரிவித்துள்ளார்.