இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியது. இப்போட்டியில் நியூசிலாந்து வெல்வதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தியும் முக்கிய பங்கு வகித்தார்.
இந்தநிலையில், நியூரோபிளாஸ்டோமா என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது சிறுமி ஹோலி பீட்டியின் சிகிச்சைக்காக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜெர்ஸியை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளார் டிம் சௌத்தி. ஏலத்தின் மொத்த தொகையும் ஹோலி பீட்டியின் சிகிச்சைக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். டிம் சௌத்தி ஏலம் விடப்போகும் அந்த ஜெர்ஸியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்களின் கையெழுத்து இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிம் சௌத்தி இதுகுறித்து, "ஹோலி தொடர்ந்து போராடிவரும் நிலையில், பீட்டி குடும்பத்தின் தற்போதைய மருத்துவ தேவைகளுக்கு இந்தச் சட்டை (ஜெர்ஸி) ஏதாவது ஒருவகையில் பங்களிக்கும் என நம்புகிறேன். ஒரு பெற்றோராக, போராடிக்கொண்டிருக்கும் அவர்களிடத்தில் என் இதயம் செல்கிறது" என தெரிவித்துள்ளார்.