கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இவ்வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவைகளில் சில இவ்வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், கரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் தொடர்பில் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தார். தற்போது அத்தனிமை காலத்தை நிறைவு செய்த டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் கலந்துகொண்டு பேசிய டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், "கரோனா வைரஸுடன் போராடி நாம் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் அது சோர்வாக இல்லை. கரோனா பலவீனமானவர்களைத் தாக்குகிறது. மேலும், சமத்துவமின்மை, பிரிவு, மறுப்பு, விருப்பமான சிந்தனை ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது" எனக் கூறினார்.