உலக கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தள்ளியிருக்கிறது அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, சென்ற உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட முக்கியமான வீரர்கள் அடுத்த சீசனில் இருக்கமாட்டார்கள். நீங்கள் மிஸ் செய்பவர்களாக அவர்கள் இருக்கலாம் என்ற நினைப்பில் தயார் செய்யப்பட்ட லிஸ்ட் இது.. நாங்கள் மிஸ் செய்த வீரர்களை கமெண்டில் குறிப்பிடலாம்.
திலகரத்னே தில்ஷன் - இலங்கை
இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டுபவர். ஆக்ரோஷமான ஸ்டைலில் பவுலர்களை பந்தாடுவதில் ஸ்பெஷலிஸ்ட். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் 395 ரன்கள் விளாசியிருந்தார். ஆனால், உலகக்கோப்பைக்குப் பிந்தைய நீடிக்காத ஃபார்ம் அவரை கட்டாய ஓய்வுக்குத் தள்ளியது. 2016ஆம் ஆண்டு அவர் ஓய்வை அறிவிக்கும்போது, உலகளவில் அதிக ரன்கள் அடித்த 11ஆவது வீரராக இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் செயல்பட்டு பல விக்கெட்டுகளைக் குவித்துள்ளார்.
மிஸ்பா உல் ஹக் - பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக், 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கூட்டிச்சென்றவர். 2015 உலகக்கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் 350 ரன்கள் விளாசியிருந்தார். 2017ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும், அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்காமல் கடைசிவரை இருந்தவர்.
டேனியல் வெட்டோரி - நியூசிலாந்து
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர். உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தனது அணியை முதல்முதலாக கூட்டிச்சென்ற பெருமைக்குரியவர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், சாமுவேல்ஸ் விரட்டிய பந்தை பவுண்டரி லைனில் ஒற்றைக் கையில் பிடித்து எனக்கின்னும் வயசாகலை என நிரூபித்தவர். ஆனால், ஏனோ அந்த சீசன் முடிவிலேயே தனது ஓய்வையும் அறிவித்தார்.
குமார் சங்ககாரா - இலங்கை
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அதிக ரன் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 7 போட்டிகளில் 541 ரன்கள் விளாசியிருந்தார். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்குப் பின்னர், கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 2017ஆம் ஆண்டு அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர், விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதிரவைக்கிறார்.
ஏபி டிவில்லியர்ஸ் - தென் ஆப்பிரிக்கா
கிரிக்கெட் உலகில் அதிகம் நேசிப்பட்டவர்களில் ஒருவர். 360 டிகிரிக்கும் சுழன்று சுழன்று பந்தை பறக்கவிடும் வித்தைக்காரர். இந்த ஆண்டின் மிகுந்த அதிர்ச்சிக்குரிய ஓய்வு அறிவுப்பு இவருடையதுதான். ஐ.பி.எல். தொடரில் தான் ஒரு சூப்பர் மேன் என்பதை நிரூபித்த இவர், நல்ல ஃபார்மில் இருக்கும்போதே என் ஓய்வை அறிவிப்பதை சரி என்று நினைக்கிறேன் எனக்கூறி அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.