Skip to main content

ஒரு பந்தில் மாறிய ஆட்டம்! - சூப்பர் 4ல் இலங்கை

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

SriLanka Vs Afghanistan asia cup

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆறாவது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று (05-09-2023) இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டதில் இலங்கை நிர்ணயித்த 292 ரன் இலக்கை, ஆப்கானிஸ்தான் 37.1 ஓவரில் எட்டினால் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதனால் போட்டி முடியும் வரை சுவாரஸ்யமாக சென்றது.

 

ஆசியக் கோப்பை 2023ன் கடைசி லீக் ஆட்டம் நேற்று கடாபி ஸ்டேடியத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையே நடந்தது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துடனான போட்டியில் தோற்றது. இதனால், இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற சூழல் உருவாகியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசன் சனாக பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் நிஷான்ங்க-கருணரத்னே கூட்டணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பின்னர், கருணரத்னே 32 ரன்களில் ஆட்டம் இழக்க, குசால் மென்டிஸ் இறங்கினார். தொடர்ந்து, நிஷாங்க 41 ரன்கள் சேர்த்து நயிப் வீசிய பந்தில் கேட்ச்அவுட் ஆகினார். அடுத்து, சமர விக்ரமா சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

 

இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு அசலாங்க-குசால் மென்டிஸ் இணை ஆட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அசலங்கா ஒரு பக்கம் நிதானமாக விளையாட, மறுபுறம் மென்டிஸ் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதனையடுத்து, அசலங்கா 36 ரன்களும், சில்வா 14 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சனாக 5 ரன்கள் எடுத்து ரஷித் கானின் சுழலில் சிக்கி கிளீன் போல்ட் ஆனார். ஆனால், குசால் மென்டிஸின் சிறப்பான ஆட்டத்தால் அணிக்கு 84 பந்தில் 92 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

 

இதனால் இலங்கை கணிசமான ஸ்கோரை எட்டியது. இறுதி வரிசையில் களமிறங்கிய துணித் வெல்லகல்லே 33 ரன்களுடன் களத்தில் நிற்க. தீக்சனா 28 ரன்களில் போல்ட் ஆனார். 50 ஓவரை முழுமையாக விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் குல்பதின் நயிப் 4 விக்கெட்டும், ரஷித்கான் 2 விக்கெட் எடுத்திருந்தனர்.

 

SriLanka Vs Afghanistan asia cup

 

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றுள்ளதால் இந்த போட்டியில் வெல்ல வேண்டும். மேலும், இந்த ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த 292 ரன் இலக்கை, ஆப்கானிஸ்தான் 37.1 ஓவரில் எட்டினால் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதனால் போட்டி முடியும் வரை சுவாரஸ்யமாக சென்றது. இந்த சவாலை எதிர்கொள்ள தொடக்கக் ஆட்டக்காரர்கள் குர்பான்-இப்ராஹிம் களமிறங்கினர். முதல் ஓவர் முதலே வேகமாக ரன்கள் சேர்க்க முயன்று குர்பான் 4 ரன்னிலும், இப்ராஹிம் 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர், ரஹ்மத் நிதானமாக விளையாடி 40 பந்துகளில் 45 ரன்களோடு விடைபெற்றார். அடுத்து கேப்டன் ஹஸ்மதுல்லா அருமையான ஆட்டத்தால் 59 ரன்களை அணிக்கு சேர்த்து ஆட்டம் இழந்தார். 

 

விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதால் ஆப்கானிஸ்தான் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது. அதிலும், முகமது நபி ஆறு பவுண்டரிகள், ஐந்து சிக்சர் என 32 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சற்றுத் தடுமாற ஆரம்பித்தது. ஆட்டத்தின் மிகமுக்கியமான கட்டத்தில் முகமது நபி, தீக்சனாவிடம் ஆட்டம் இழந்தார். மறுபடியும் ஆட்டம் இலங்கை வசம் வந்தது. இருந்தாலும் இறுதியில், கரீம் 22 ரன், நஜிபுல்லா 23, ரஷித் கான் 27 என விளாசத் தொடங்கினர். சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறி விடும் என்ற நிலை உருவானது.

 

ஆப்கானிஸ்தான் 37 ஓவரில் 289 எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து கைவசம் 2 விக்கெட்டுகளை வைத்திருந்தது. சூப்பர் 4க்கு தகுதி பெற 1 பந்தில் மூன்று ரன்கள் ஆப்கானிஸ்தானுக்கு தேவை. இதனால், பார்வையாளர்கள் இருக்கை நுனிக்கு வரும் சூழல் உருவானது. ஆனால், 38வது ஓவரை வீசிய தனஞ்செய டி சில்வா, 37.1 பந்தில் ஒரு விக்கெட்டையும் 37.4 பந்தில் மறு விக்கெட்டையும் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. 37.1 பந்தில் விக்கெட் விழாமல் பந்து பவுண்ட்ரியை நோக்கிச் சென்றிருந்தால் ஆப்கானிஸ்தான் சூப்பர் 4க்கு முன்னேறியிருக்கும். ஆனால், அந்தப் பந்தில் விக்கெட் வீழ்ந்ததால், ஆப்கானிதான் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். 

 

இலங்கை பந்து வீச்சில் கசன் ரஜிதா 4 விக்கெட்டும், துணித் மற்றும் டி சில்வா தலா 2 விக்கெட்டும் எடுக்க தீக்சனாவும் பதிரனாவும் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது 92 ரன்களை எடுத்த குசால் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டது.

 

சூப்பர் 4 சுற்றுக்கு ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும். பி பிரிவில் இலங்கை, வங்கதேசமும் முன்னேறியது. இன்று (06-09-2023) கடாபி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோத உள்ளது. சூப்பர் 4 சுற்றின் இறுதியில் முதல் 2 இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.