கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், பும்ராவுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இந்திய அணி குறித்து கூறியதாவது, “ஐபிஎல் போன்ற போட்டிகள் உலக அளவில் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றும் அழிவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம். இந்திய அணி தரமான மற்றும் கலவையான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது. முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையாகவே சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மொத்தமாக அவர்கள் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்றார்.