உலகிலேயே அதிக அளவிலான சம்பளம் வாங்கும் லிஸ்டில் இதுவரை இருந்தவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் குத்துச்சண்டை வீரரான சால் கானலோ அல்வரேஸ். டாஜன் எனும் விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பும் நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போட்டதில் அல்வரேஸ் இந்தப் புகழைப் பெற்றிருந்தார்.
தோராயமாக ரூ.2,700 கோடி வரையிலான இந்த ஒப்பந்தத்திற்காக இவர் 11 சண்டைகள் போடவேண்டும். சராசரியாக ஒரு சண்டைக்கு 33 மில்லியன் டாலர் வரை அவருக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம், வருங்காலத்தில் அல்வரேஸின் சம்பளம் நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாயாக மாறியிருக்கும்.
கடந்த 13 ஆண்டுகளாக நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த யங்கீஸ் ஸ்லக்கர் ஜியான்கார்லோ ஸ்டாண்டன் எனும் பேஸ்பால் வீரரின் சம்பளம் மட்டுமே உலகளவில் விளையாட்டு வீரரால் அதிகபட்சமாக கருதப்பட்டது. அதனை அல்வரேஸ் முறியடித்துள்ளார். அல்வரேஸுக்கு நெருக்கமாக நெய்மர் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் ஒப்பந்தங்கள் வந்திருந்தாலும், அதனை முறியடிக்கப் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.