மயங்க் அகர்வால் பீல்டிங் குறித்து பீல்டிங் ஜாம்பவானும், பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.
13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்த போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இரண்டாவது சூப்பர் ஓவரின் இறுதிப்பந்தில் எல்லைக்கோட்டருகே நின்ற மயங்க் அகர்வால், பொல்லார்ட் அடித்து சிக்ஸருக்குச் சென்ற பந்தை லாவகமாகத் தடுத்தார். மயங்க் அகர்வாலின் இந்த பீல்டிங் பஞ்சாப் அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெரிதும் கைகொடுத்தது. இதனையடுத்து அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ், "மயங்க் அகர்வால் பீல்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. பொல்லார்ட் மாதிரியான வீரர்கள் களத்தில் இருக்கும் போது, பவுண்டரிகளை தடுத்து பீல்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று நாம் முன்னரே பேசியிருக்கிறோம். அதிக நேரம் செலவிட்டு பவுண்டரி எல்லையில் பயிற்சி செய்தோம். இது நம் வீரர்களுக்கு சிறப்பு திறமையாகிவிட்டது. கடினமான நேரங்களிலும் நம் வீரர்கள் பொறுமையாக செயல்படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது" என பஞ்சாப் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் பேசியுள்ளார்.