இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 4-1 என்று வெற்றி பெற்ற புத்துணர்ச்சியுடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது. முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
ரோஹித் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், இந்த தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் மற்றும் சிராஜ் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். கில்லும் அணிக்கு திரும்பி உள்ளதால் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இரண்டு பேர் களமிறங்க போகிறார்கள் என்பது போட்டி தொடங்கும் முன்பே தெரிய வரும். பெரும்பாலும் யசஸ்வி மற்றும் கில் ஆகியோரே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ், ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோருக்கே மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கீப்பராக இஷான் அல்லது ஜித்தேஷ் இருவரில் யாருக்கு முன்னுரிமை என்பதும் ரசிகர்களிடையே ஆவலைக் கூட்டி உள்ளது. பவுலிங்கைப் பொறுத்தவரை சிராஜ், முகேஷ், அர்ஸ்தீப், பிஷ்னோய் என்று களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் மார்க்ரம் தலைமையில் களமிறங்க உள்ளது. டி காக் இல்லாத நிலையில், லுங்கி இங்கிடியும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். மார்க்ரம், மில்லர், மஹராஜ், ஷம்சி, கிளாசென், பெலுக்வாயோ என அனுபவ வீரர்களும் புதிய இளம் வீரர்களும் என சரிசமமாக தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 டி20 போட்டிகளில் எதிர்த்து விளையாடியுள்ளனர். இதில் இந்திய அணி 13 முறையும், தென் ஆப்பிரிக்க அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்காமல் முடிந்துள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் ஒரு டி 20 போட்டியாக இரண்டு முறையும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு முறையும் என மூன்று முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் உலககோப்பை டி20 தொடருக்கு ரோஹித் மற்றும் கோலி தேர்வு செய்யப்படுவார்களா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ரோஹித், கோலி ஃபார்மை பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு உலகக்கோப்பை அணியின் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் இன்று முதல் டி20 நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.
- வெ.அருண்குமார்