இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி மும்பையில் இன்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஹெலி 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க இதன் பின் ஜோடி சேர்ந்த மோனே மற்றும் டஹிலா மெக்ராத் இணையை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்களை குவித்தது. அதிக பட்சமாக மோனே 54 பந்துகளில் 82 ரன்களும் டஹிலா 51 பந்துகளில் 70 ரன்களையும் குவித்தனர்.
188 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா மற்றும் சஃபாலி வர்மா அதிரடியாக ரன்களை சேர்த்தனர். சஃபாலி வர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுபுறம் தொடர்ந்து ரன்மழை பொழிந்த ஸ்மிருதி மந்தனா 49ன் பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வந்த ரிச்சா கோஷ் அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. ஆட்டம் சமன் ஆனது.
தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை எடுத்தது. இதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. ஆட்டநாயகியாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.