Skip to main content

2021 டி20 உலக கோப்பையில் தோனியின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது - ஆகாஷ் சோப்ரா

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

Dhoni

 

 

2021 டி20 உலக கோப்பை போட்டியில் தோனியின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

 

2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடினார். அதன் பின்பு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாத தோனி, தன்னுடைய ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இனி தோனி அணிக்கு திரும்புவதில் சாத்தியமில்லை என்று ஒரு சாரரும், ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிருபிப்பதன் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பி விடுவார் என்று மற்றொரு சாரரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தோனியும் தன்னுடைய சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தோனி குறித்து ஒரு கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "டீ20 உலக கோப்பை இந்தியாவில்தான் நடைபெறுகிறது. தோனி இல்லாமலும் நம்மால் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அவர் இல்லாமல் விளையாடி நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். எனவே அவரது இருப்பு பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

தோனி 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.