இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆவார். வேகப்பந்துவீச்சுக்கு உகந்த மைதானங்களில் அவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் பலர் தங்களது நடு ஸ்டம்புகளைப் பறிகொடுத்துள்ளனர். எதிரணியினரின் விக்கெட்டை வீழ்த்திய பின் அவரது கொண்டாட்டமும், ஆர்ப்பரிப்பும் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும். இவர் 2003ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் இச்சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் உள்ள முத்தையா முரளிதரன், ஷேன்வார்னே, அனில்கும்ப்ளே என அனைவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில போட்டிகளில் ஆண்டர்சனின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் ஆண்டர்சன் இச்சாதனையை படைத்து, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.