16 ஆவது ஐபிஎல் சீசனின் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் (14.05.2023) மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களையும் டிவோன் கான்வே 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 145 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களையும் ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இந்த போட்டியானது சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கும் கடைசி லீக் போட்டியாகவும் அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியும், சென்னை அணியைச் சேர்ந்த மற்ற வீரர்களும் சென்னை அணியின் கொடியை கைகளில் ஏந்தியவாறு மைதானத்தை சுற்றிலும் வலம் வந்து கிரிக்கெட் பந்துகளை ரசிகர்களுக்கு வழங்கி அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது மைதானத்தில் போட்டி குறித்து வர்ணித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் திடீரென சற்று தூரத்தில் இருந்து ஓடி வந்து தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டார். அதனைத் தொடர்ந்து தோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். அதன் பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இவர்களின் இந்த செயலானது போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.