டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசு ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளதோடு, இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.