தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா, கர்நாடக சங்கீதம் அனைத்து விதமான மனிதர்களுக்கும் சொந்தமானது என்று குடிசைவாழ் மக்களிடம் கர்நாடக இசையை கொண்டு சேர்த்து வருகிறார்.
இவர் மகசேசே விருது பெற்றுள்ளார். இந்துத்துவாவை குறித்து எதிர்மறையான கருத்துகள் உடையவர். சமூக ஆர்வலர்களுடன் இணைந்து தனது இசையின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
டெல்லியிலுள்ள நேரு பூங்காவில் டி.எம் கிருஷ்ணா இன்று இசை கச்சேரி நடத்துவதாக இருந்தது. ஆனால், இதற்கு பலர் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்த விமான நிலையங்கள் ஆணையம் இதை ரத்து செய்தது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆம் ஆத்மி அரசு, டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை நடத்தவும் முன்வந்துள்ளது. டெல்லியில் பைவ் செசன்ஸ் கார்டனில் இன்று மாலை இந்நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.