இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 336 ரன்கள் குவித்தது.
337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்த பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர், "ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது, ஈரப்பதமாக இல்லை எனும் போது பேட்டிங்கைதேர்வு செய்யலாமே. முதலில் சர்பிராஸ் அகமது அணியின் பலம் பேட்டிங் அல்ல, பந்துவீச்சுதான் என்ற உண்மையை அறிய வேண்டும். டாஸ் வென்று பேட்டிங் செய்திருந்தாலே ஏறக்குறைய பாதி வெற்றி பெற்றதுபோலத்தான்.
ஆனால் பாகிஸ்தான் அணியினர் செயல்பாடு மூலம் முட்டாள்தானமான, மூளையில்லாத கேப்டன்ஷிப் மற்றும் மூடத்தனமான நிர்வாகம்தான் வெளிவந்துள்ளது. கேப்டன் சர்பிராஸ் அகமது 10-ம்வகுப்பு மாணவர் போல் செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார். பிறகு எவ்வாறு வெற்றி பெற முடியும்" என கூறியுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் வறுத்தெடுத்து வருவதால் சோகத்தில் இருக்கும் சர்பராஸிற்கு பிரபலங்களும் வசை பாடுவது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.