இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கரோனா தொற்று பரவலால், வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, சைனி, சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் மெல்போர்னில் உள்ள உள்ளரங்கு உணவகத்தில் உணவருந்தினர். அப்போது அவர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளரங்கு உணவகத்தில் உணவருந்திய ஐந்து இந்திய வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதனையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கும், இந்திய அணியின் மற்ற பணியாளர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து வீரர்களும், கரோனா தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டியதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.