அகமது சேஷாத் சச்சினை மிஞ்சிய திறமைசாலி என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரரான அகமது சேஷாத் சமீபத்தில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர். தொடர்ந்து ஃபார்மில் இல்லாததால், அடுத்தடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய பிடிவி ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், பாகிஸ்தானிய வீரர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுவதாக தொகுப்பாளர் கூறினார்.
அதற்கு அப்துல் ரசாக், ஆமாம்.. என்னைப் பொருத்தவரை அகமது சேஷாத் அபாரமான வீரர். அவர் நினைத்தால் சச்சின் மற்றும் சேவாக் சாதனைகளை முறியடிக்க முடியும் என தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன தொகுப்பாளர், என்னது? என கேள்வியெழுப்ப, அவரது தொடக்ககாலத்தில் நான் அப்படிதான் நினைத்தேன். மிகத்திறமையானவர். உமர் குல்லும் அப்படிப்பட்டவர்தான். அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு வீரர் அவர் போக்கில் விளையாட அனுமதித்தால், அவரது 100% விளையாட்டு வெளிப்படும். சேஷாத் மற்றும் உமர் ஆகியோரின் தொடக்ககாலம் அப்படித்தான் இருந்தது. ஆனால், அவர்களது எதிர்காலத்தை அவர்களே வீணாக்கிவிட்டார்கள் ரசாக் தெரிவித்தார்.