உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வாட்சன். 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற வாட்சன், தற்போது முதன்முறையாக ஒரு அணிக்கு உதவி பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில், தற்போது உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.