2015 உலகக்கோப்பைக்கு பிறகான காலத்தில், தனக்கு மன ரீதியாக நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் நேரலையில் ரோஹித் சர்மாவுடன் கலந்துரையாடிய அவர், 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நாட்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "2015 உலகக்கோப்பை தொடருக்குப் பின் காயத்திலிருந்து மீண்டு வரவே 18 மாதங்கள் ஆனது. இது என் வாழ்க்கையில் வலிநிறைந்த நாட்களாகும். மிகுந்த மன அழுத்தமான காலகட்டம் அது.
அதன்பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது என் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் என்னைப் பிடித்து உலுக்கின. என் குடும்பத்தினர் மட்டும் எனக்கு ஆறுதலாக இல்லையெனில் நான் மீண்டு வந்திருக்க முடியாது, இந்தக் காலகட்டத்தில்தான் 3 முறை தற்கொலை செய்துகொள்ள எண்ணம் தோன்றியது.
என்னுடன் 24 மணி நேரமும் யாராவது அருகில் இருக்க வேண்டிய நிலை, நான் மன ரீதியாகச் சரியாக இல்லை, கடும் உளைச்சலிலிருந்தேன். என் குடும்பம் மட்டும் இல்லையெனில் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். என் குடும்பத்தாருக்கு என் நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.