Skip to main content

"ஏமாற்றமாக உள்ளது" விராட் கோலி இல்லாத டெஸ்ட் போட்டிகள் குறித்து நாதன் லியான் பேச்சு!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Nathan Lyon

 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 27-ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் தொடங்குகிறது.

 

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித் தொடரில் முழுமையாக விளையாடவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரில் முதல்போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்ப உள்ளார். தன்னுடைய மனைவியின் பிரசவகாலத்தின் போது, இந்தியாவில் இருக்க வேண்டும் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டதால், பி.சி.சி.ஐ-யும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியான் விராட் கோலி இல்லாத டெஸ்ட் போட்டிகள் குறித்துப் பேசியுள்ளார்.

 

"ரஹானே, புஜாரா போன்ற இளம்வீரர்களும் அணியில் உள்ளனர். இத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. விராட் கோலி அணியில் இல்லை என்பது மட்டுமே எங்களைக் கோப்பையை வெல்ல வைத்துவிடாது. நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளது. விராட் கோலி இல்லையென்பது இத்தொடரில் ஏமாற்றம்தான். உலகின் தலை சிறந்த வீரருக்கு எதிராகவே விளையாட நாம் விரும்புவோம். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே வரிசையில் விராட் கோலியும் உலகின் தலைசிறந்த வீரர் என்று நான் நம்புகிறேன். சற்று ஏமாற்றமளித்தாலும், அவர்கள் அணியில் சில சிறந்த வீரர்கள் உள்ளனர்". இவ்வாறு நாதன் லியான் கூறினார்.