ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து, டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.
சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இம்முறையும் வெற்றிகள் பெற்று, தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய அணியும், கடந்த ஆண்டு தொடரை இழந்ததற்கு இம்முறை பதிலடி கொடுக்க வேண்டுமென்று ஆஸ்திரேலிய அணியும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதால், இத்தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரவிருக்கும் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பேசுகையில், "ஒவ்வொரு அணியிலும் இரண்டு அல்லது மூன்று பெரிய பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். பல அணிகளுக்கு கேப்டன்கள், அந்தவகையில் அமையும். இங்கிலாந்திற்கு ஜோ ரூட், நியூஸிலாந்திற்கு வில்லியம்சன். அவர்கள் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் வெற்றி வாய்ப்பு இருப்பது போல நமக்குத் தோன்றும். இந்திய அணியில், விராட் கோலி விக்கெட் எப்போதும் பெரிதான ஒன்று. வர்ணனையாளர்கள் விடாமல் அவரைப் பற்றித்தான் பேசுகின்றனர். அவரை ரன் சேர்க்கவிடாமல் செய்ய முடியும் என்று நம்புகிறோம். வரவிருக்கும் தொடர் பெரிய தொடராக இருக்கப்போகிறது. மீண்டும் சொந்த மண்ணிற்குத் திரும்பியுள்ளோம். இத்தொடருக்காக நல்ல முறையில் தயாராகி வருகிறோம் என்பது போல உணர்கிறேன்" எனக் கூறினார்.