ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கெடுக்க முடியாமல் போனது, பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய இழப்பாக உள்ளது என பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரானது உலக அளவில் புகழ்பெற்றது. பல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கெடுப்பதாலும், சர்வதேச போட்டிகளுக்கு இணையான அனுபவம் பார்வையாளர்களுக்குக் கிடைப்பதாலும் ஐபிஎல் போட்டிகளுக்கென்று உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான அப்ரிடி, ஐபிஎல் தொடர் குறித்தும், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அவர், "ஐபிஎல் தொடர் உலக அளவில் வரவேற்பைப் பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் அதில் பங்கெடுக்க முடியாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம். பாபர் அஸாம் மாதிரியான வீரர்களுக்கு ஐபிஎல்-லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது, சர்வதேச போட்டிகளில் நெருக்கடியின்றி விளையாடுவதற்கான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். சில அரசியல் காரணங்களால், வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பெரிய இழப்பு" என்றார்.
மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் குறித்துப் பேசுகையில், "இந்தியாவில் விளையாடியபோது இந்திய மக்களிடம் இருந்து கிடைத்த அன்பும், ஆதரவும் மிகப்பெரியது. இப்போது சமூக வலைதளத்தில் நான் ஏதாவது பதிவிட்டாலும், இந்திய மக்களிடம் இருந்து பதில் வரும். நானும் அவர்களுடன் உரையாடுவேன். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அற்புதமாக இருந்தது" எனக் கூறினார்.