பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எட்க்பாஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடித் தோற்றிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம் ஆசியாவிலேயே முதன்முறையாக தன்னை இந்த மைதானத்தில் தோற்கடித்த இந்திய அணி என்ற செய்தியைத் தவிர்த்ததோடு, தனது பெருமைக்குரிய ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
ஒருநாள் கிரிக்கெட் தொடரைப் போலவே, இந்திய அணியின் ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் சிதறடிக்கப்பட்டது முதல் தோல்விக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்தக் குறை என்பது ரசிகர்களுக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றைதான். சேவாக் இருந்த காலத்தில் தொடக்க ஓவர்களில் பந்துகள் பவுண்டரியை நோக்கி அலறிக்கொண்டு போகும். அப்படியொரு தொடக்கமாக இல்லாமல், வெறுமனே கீப்பருக்கு பந்தை விட்டுவிடுவது, பந்தை பழையாதாக்காமல் விக்கெட்டைப் பறிகொடுக்கவே வழிவகுக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
ஆக, இந்திய அணியில் அந்த இடத்தை நிரப்ப இருக்கும் ஒரே வாய்ப்பு ரவீந்திர ஜடேஜாதான் என்கின்றனர் அவர்கள். அசால்ட்டாக பீல்டிங் செய்யும், அதேசமயம், பந்தை அதிரடியாக அடித்து ஆடும் திறமை அவருக்கு இருப்பதாகவும் நம்புகிறார்கள். அவரை அணியில் இறக்கி அவர் போக்கில் விளையாட விடுவதால், அணியில் அஷ்வினைப் போல அனுபவம்வாய்ந்த ஸ்பின்னர் இருக்கிறார் என்ற நம்பிக்கையும் கோலிக்கு கிடைக்கும். ராஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து ஓப்பனராக களமிறக்கலாம். ஆனால், அதற்கு அணித்தேர்வுக்குழு சம்மதிக்க வேண்டும் என்கின்றனர்.