ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 - 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தத் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்ததும் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, தோனி நடுவர்களிடம் இருந்து போட்டி பந்தை வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சொதப்பிய தோனி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்ற தகவல்களும் பரப்பப்பட்டன.
இதை மறுத்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இது மோசமான கணிப்பு எனவும் கண்டித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கியதற்கான காரணம் தெரியாமல் இந்தக் கருத்தை பரப்புகிறார்கள். அவர் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணிடம் அதைக்காட்டி பந்தின் தன்மை, பிட்சின் சூழல் பற்றி விளக்குவதற்கே பந்தை வாங்கினார். இந்தக் கருத்துகள் முட்டாள்தனமானவை. 45 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் பந்து என்ன நிலையில் இருக்கிறது என்பதை பரத் அருணுக்கு தோனி விளக்கிக் கொண்டிருந்தார்’ என விளக்கமளித்துள்ளார். லீட்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.