இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால விக்கெட் கீப்பராக கருதப்படுபவர் ரிஷப் பாண்ட். சமீபத்தில் நடந்துமுடிந்த ஐ.பி.எல். தொடரில், டெல்லி அணி சொதப்பியிருந்தாலும், அந்த அணிக்காக களமிறங்கி அசத்தியவர். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். தோனி மற்றும் ராகுல் ட்ராவிட் தனது வளர்ச்சியில் ஆற்றிய முக்கிய பங்கு குறித்து அவர் கூறியதாவது, ‘எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போது மகி பாயிடம் (தோனியிடம்) எனது சந்தேகத்தை எழுப்புவேன். ஐ.பி.எல். ஒப்பந்தம் தொடங்கி, விக்கெட் கீப்பிங் வரை எனது எல்லா கேள்விகளுக்கும் அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார். விக்கெட் கீப்பிங் பற்றி தோனியிடம் கேட்டால், கைகளும் தலையும் ஒரே கட்டுப்பாட்டில் இருந்தால், உடல் தானாக கட்டுப்பாட்டு வரும். அது கீப்பிங் செய்ய மிக அவசியமானது. அது நிறையவே உதவியிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
ட்ராவிட் பற்றி பேசியபோது, ‘களத்தில் இருக்கிறோமோ இல்லையோ.. எப்போதும் நமக்குள் ஒரு விஷயத்தைச் செய்ய ஆர்வம் இருக்கவேண்டும். என் மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை, என் திறமையை தீவிரப் படுத்தியிருக்கிறது. சூழலுக்கு தகுந்தாற்போல் எனது விளையாட்டை தகவமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார்’ என கூறியுள்ளார்.