Skip to main content

குல்தீப் யாதவ் இந்தியாவின் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவர்! - மூன்று காரணங்கள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
Kuldeep

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார் இளம் வீரர் குல்தீப் யாதவ். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர்களை அதகளப்படுத்தினார். 
 

ஒரேயிரு வீரரை எதிர்கொள்ள முடியாமல், அந்த அணியின் பேட்ஸ்மென்கள் திணற, ஒரு கட்டத்தில் குல்தீப்புக்காக மெரிலின் எந்திரப் பயிற்சி வரைக்கும் சென்றனர். கேப்டன் முதல் பயிற்சியாளர் வரை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யும் அளவுக்கு திறமையாக விளையாடும் குல்தீப் யாதவ்வை, இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் என்று பலரும் தெரிவிக்கின்றனர். ஏன் என்ற காரணங்கள் இதோ...
 

 

 

அனைத்து ஃபார்மேட்டுகள், பிட்ச் கண்டிஷன்களில் நிலைத்தன்மை
 

கிரிக்கெட்டில் எப்போது கன்சிஸ்டன்ஸி முக்கியம் என்பார்கள். அதேசமயம், சில நாட்டு பிட்சுகள் அயல்நாட்டு வீரர்களை பெரிதும் சோதனைக்குள்ளாக்கும். ஆனால், குல்தீப் சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் பவுண்டரிகளை நோக்கி பறக்க, பந்தின் வேகத்தையும், பிட்ச் செய்யும் இடத்தையும் மாற்றி மாற்றி வீசியதாகக் கூறினார். இயல்பாகவே பேட்ஸ்மென்களை இது குழப்பத்தில் ஆழ்த்தும். 
 

இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த மூன்றாவது இந்தியரான குல்தீப்பின் எக்கானமி ரேட் எப்போதும் ஐந்துக்குக் குறைவாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அசத்தலாக செயல்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்டு, அதை அப்படியே தொடர்கிறார். 
 

 

 

சைனாமேன் ஸ்டைல் - அரிதினும் அரிது
 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சைனாமேன் ஸ்டைல் என்பது அரிதினும் அரிது. ஸ்பின்னர்களில் பல்வேறு வகைகள் இருந்தாலும், சைனாமேன் ஸ்டைல் என்பது உண்மையில் அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும். அதேசமயம், இந்தியா மாதிரியான ஆசிய நாட்டில் எப்போதும் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதனால், சைனாமேன் குல்தீப் எதிரணி பேட்ஸ்மென்களை திணறிடித்து விடுகிறார். இது கடந்த ஓராண்டாக நடந்து கொண்டிருக்கிறது என்பதால், குல்தீப் முக்கியத்துவம் பெறுகிறார். 
 

இளம் வயது... நீண்ட பயணம்...
 

கிரிக்கெட்டைப் பொருத்தவரை வயது என்பது மிகமுக்கியமானது. வெறும் 23 வயதேயான குல்தீப் யாதவ் இதே நிலைத்தன்மையுடன் தொடர்ந்து விளையாடினால், அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக தொடரலாம். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களைத் திணறடித்ததால், டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் விளையாடுவார் என்ற விராட் கோலியின் கருத்து, அவரது நல்ல எதிர்காலத்துக்கான சமிக்ஞையாக இருக்கலாம்.