காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர்களால், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் கலந்துகொள்ள 216 வீரர்கள் கலந்துகொண்டனர். இதற்காக அந்த வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கதவுகள், மின்விளக்குகள், குளிர்சாதனப் பொருட்கள், நாற்காலி போன்ற பொருட்களை இந்திய வீரர்கள் சேதப்படுத்தியதாக காமன்வெல்த் கமிட்டி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியது. மேலும், இதற்கான அபராதமாக ரூ.74ஆயிரம் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து பதிலளித்த இந்திய ஒலிம்பிக் சங்கம் கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் தொடர்புடைய வீரர்களே குற்றச்சாட்டுக்கு காரணம் என்றும், அதனால் சம்மந்தப்பட்ட சங்கத்தினர் அபராதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியிருக்கிறது.
இந்திய அணி நடந்துமுடிந்த காமன்வெல்த் போட்டிகளில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.