கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 700 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மஹாராஷ்ட்ரா அரசுக்கு 25 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கும் 25 லட்சமும் அவர் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி 50 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசியை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார், மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மும்பை கிரிக்கெட் சங்கம் 50 லட்ச ரூபாயையும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் 42 லட்ச ரூபாயையும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் 25 லட்ச ரூபாயையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.