Skip to main content

ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்! - ஆதரவுக்கு சுனில் ஷேத்ரி நன்றி

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

உலகின் மிகச்சிறந்த விளையாட்டான கால்பந்தாட்டத்திற்கு இந்தியளவிலும் நல்ல ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அந்தக் கூட்டத்திற்கு இந்திய கால்பந்தாட்ட அணியின் மீது பெரிய ஆர்வமேதும் இல்லாமல் இருந்தது. இந்திய கால்பந்தாட்ட அணி என்ற ஒன்று இருப்பதையே யாரும் கண்டுகொண்டதில்லை. அந்த நிலையை, இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரியின் வேண்டுகோள் தலைகீழாக மாற்றியிருக்கிறது.
 

Sunil

 

எங்கள் மீதான விமர்சனங்களை, நாங்கள் விளையாடும்போது நேரில் பார்த்து முன்வையுங்கள். உலக கால்பந்தாட்ட அணிகளுக்கு இணையாக இல்லாவிட்டாலும், எங்களால் எங்களை நிரூபிக்க முடியும். எங்கள் விளையாட்டையும் பார்க்க வாருங்கள் என உருக்கமான வீடியோ ஒன்றை சுனில் ஷேத்ரி வெளியிட, நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.
 

நேற்று இரவு இந்தியா மற்றும் கென்யா கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டி, மும்பை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்திய கேப்டன் சுனில் ஷேத்ரியின் நூறாவது சர்வதேச போட்டி என்பதால் அந்தப் போட்டி கூடுதல் கவனம் பெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், சூழல் மாற்றம் இரண்டு அணிகளுக்குமே இடையூறாக இருந்தது. அதனால், முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
 

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பெனால்டி மூலமாக முதல் கோலை அடித்தார் கேப்டன் சுனில் ஷேத்ரி. அடுத்த சில நிமிடங்களில் ஜேஜே இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். தனது நூறாவது சர்வதேச போட்டியில் மூன்றாவது கோலை சுனில் அடிக்க, அரங்கமே அதிர்ந்தது. இத்தனை நாட்கள் வெறும் மைதானத்தில் சாதனைகள் படைத்த இந்திய நாயகனை, ரசிகர்கள் கர்ஜனையால் கொண்டாடித் தீர்த்தனர். இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கென்யா அணியை தோற்கடித்தது. 

 

இதுகுறித்து சுனில் ஷேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவிற்காக நாங்கள் விளையாடும்போது இதேபோன்ற ஆதரவு எப்போதும் கிடைக்குமானால், எங்களால் இன்னும் சிறப்பாக நிரூபித்துக் காட்டமுடியும் என்பதை ரசிகர்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்மை ஒன்றிணைத்த இன்றைய இரவு மிகவும் சிறப்பானது. மைதானத்திற்கு வந்து ஆதரவளித்தவர்களுக்கும், வீட்டில் இருந்தபடி உற்சாகம் அளித்தவர்களுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.