கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர் , மாஸ்டர் பிளாஸ்டர் , அர்ஜுனா விருது, பாரத ரத்னா, மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இன்று, 24 ஏப்ரல் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிறது. இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக இன்னும் வலம் வந்துகொண்டிருக்கிறார். சச்சின் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னால் முடிந்தவரை நிறைவேற்றி இருக்கிறார் என்பதால்தான், அவரைப் பற்றியும் அவரின் கிரிக்கெட் வாழ்வை பற்றியும் இந்த நாடு பேசிப் பேசி கொண்டாடுகிறது, இன்னும் கொண்டாடும்.
இரண்டு நாட்களில் 26 ஏப்ரல் 2018வுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிகிறது. கிரிக்கெட் களத்தில் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சச்சின், அரசியல் களத்தில் ஏனோ பெரிதாய் எதுவும் செய்ய முடியவில்லை. என்ன காரணங்கள் இருந்தாலும் கொஞ்சம் அரசியல் செய்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. டிசம்பரில் 2017இல் மாநிலங்களவையில் பேச இருந்த ஒரு முறையும் சில உறுப்பினர்களின் மோசமான இடையூறால் நடக்காமல் போனது. பின்பு அந்தப் பேச்சை பதிவு செய்து ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டார். பல சமூக சேவைகள் செய்துவரும் சச்சின், தான் சம்பளமாகப் பெற்ற 90 லட்சம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார். கடைசியாக இது தான் அந்தப் பதவி மூலம் அவரால் செய்ய முடிந்தது. பதவிகள் இல்லாமலேயே இதற்கு மேல் செய்யக்கூடிய அவர், தவறான களத்தில் கால் வைத்ததை உணர்ந்திருப்பார்.
சென்ற ஆண்டு வெளியான 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்' திரைப்படம் அவரின் 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை மக்களுக்கு வெள்ளித்திரையில் சுருக்கிக் காட்டியது. நிறைய தெரிந்தது, கொஞ்சம் தெரியாதது என்று அந்தப் படம் அவர் கடந்து வந்த பாதையை முக்கிய நிகழ்வுகளால், முக்கிய நபர்களின் கருத்துக்களால் அனைவருக்குமான இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தொடுக்கப்பட்டது. படம் எடுக்காவிட்டாலும் அவர் இரண்டு தலைமுறைக்கு கிரிக்கெட் கனவை விதைத்து ஊக்கப்படுத்திய கிரிக்கெட் கடவுள்தான்.
கேரளா கால்பந்தாட்ட அணியை வாங்கி தன் பங்கிற்கு கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் சச்சின், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பார்க்கக்கூடிய நபர் ஆகிவிட்டார். பலருக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், மற்ற விளையாட்டுகளையும் கவனித்துக்கொண்டு வெற்றி பெறுவோரை வாழ்த்தியும், வெற்றியை தவற விட்டவர்களை ஊக்குவித்தும் சுறுசுப்பாக இருக்கிறார். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் சிக்னலில் நின்று அறிவுரை கூறியதும், சமீபத்தில் மும்பையில் மெட்ரோ வேலை நடக்கும் பகுதியில், அங்கு மெட்ரோ வேலை பார்க்கும் சிலருடன் நடுரோட்டில் கல்லி கிரிக்கெட் விளையாடி அவர்களை சந்தோஷத்தை பெருக்கியது... என்று அவ்வப்போது ஆகும் வைரல்கள் ஏராளம்.
பிறந்த நாளில் சச்சின் பெறுவதற்கும் பெறப்போவதற்கும் இனி ஏதும் இல்லை. இந்திய விளையாட்டிற்கு நிறைய நல்ல காரியங்கள் செய்தால் அதுவே அவர் இந்திய ரசிகர்களுக்கு செய்யும் பெரும் உதவி/நன்றிக்கடன். அதற்கு அவர் நலமுடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துவோம்.