இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மாலன் மற்றும் டி காக் தொடக்கம் முதலே நிதானமாக ஆடினர். இருந்தும் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி பந்துவீச்சில் பதம் பார்த்தது.
முதல் விக்கெட்டாக வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களில் டி காக்கை வெளியேற்றி விக்கெட் வேட்டையை ஆரம்பித்து வைத்தார். இதன் பின் வந்த அனைத்து தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் விக்கெட்களை கொடுத்து வெளியேறினர். முடிவில் 27.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக க்ளாசன் 34 ரன்களை எடுத்தார்.
சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் சபாஷ் அஹமத், சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் மிக குறைந்த ரன்களை பதிவு செய்தது தென் ஆப்பிரிக்கா.
100 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய அணியில் கேப்டன் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 49 ரன்களுக்கு வெளியேற இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஷ் ஐயர் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 19.1 ஓவர்களில் இந்திய அணி 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக சிராஜ் தேர்வு தேர்வானார்.