ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்கள் மளமளவென விழ மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிரீன் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டார். 21 பந்துகளில் 52 ரன்களுக்கு அவுட்டானார். பின் கைகோர்த்த ஜாஸ் இங்கிலிஸ் மற்றும் டிம் டேவிட் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்களை அடித்தார்.
187 ரன்கள் இழக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா 17 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பின் கைகோர்த்தது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி. இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இந்திய ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களை எடுத்து அவுட்டாக ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. இந்நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை பட்ட நிலையில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த விராட் இரண்டாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணி 19.5 ஒவரில் இழக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நயகனாக அக்ஸர் படேல் தேர்வு செய்யப்பட்டார். தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை பெற்ற ரோஹித் சர்மா அதை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் கொடுத்தார்.
நேற்று பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன்களில் ரோஹித் சர்மா 33 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் எம்.எஸ். தோனி 42 வெற்றிகளுடன் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் விராட் கோலி 33 வெற்றிகளுடன் இருக்கிறார்.