இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் தனது தாயைச் சந்திக்க சென்றபோது, உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.
இந்த பயங்கர விபத்தின் காரணமாக 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் ரிஷப் பண்ட் விளையாட முடியாமல் போனது. அவர் காயங்களில் இருந்து விரைவில் மீண்டு, தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல்.க்கான மினி ஏலம் நேற்று (19ம் தேதி) துபாயில் நடைபெற்றது. இதில் அணிகள் தங்களுக்கு தேவையான விளையாட்டு வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இந்த ஏலத்தின் போது, டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானதும் நிச்சயம் இந்த ஐ.பி.எல். போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடவிருக்கிறார் என அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல், சென்னை அணியின் கேப்டனான தோனியும் நேற்று துபாயில் இருந்தார். ஆனால், அவர் ஐ.பி.எல். ஏலம் நடக்கும் இடத்திற்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று மாலை ரிஷப் பண்ட்-டும், தோனியும் துபாயில் டென்னிஸ் விளையாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.