8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
இதில் பாகிஸ்தான் நியுசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் நியுசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது. 153 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் இரண்டாம் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 5 ரன்களில் வெளியேற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி பொறுமையாக ரன்களை சேர்த்தது. 8 ஆவது ஓவர் முடிவில் ரோஹித் சர்மா 27 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து தடுமாறி இந்திய அணி ரன்களை சேர்த்துக் கொண்டிருக்க ஹர்திக் பாண்டியா இறுதியில் அதிரடி காட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களை எடுத்தார்.
169 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியை வெற்றிப் பதைக்கு அழைத்துச் சென்றது.
20 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட்கள் இழப்பின்றி வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது.