13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் கடந்த இரு வாரங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியில் பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னை அணியால் திட்டமிட்டபடி பயிற்சியைத் தொடங்க முடியவில்லை. அதன் பின்பு அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது முதலில் உறுதி செய்யப்பட்ட 13 பேரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை அணி தன்னுடைய பயிற்சியைத் தொடங்கிவிட்டது. சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் ஒரு காணொளியையும் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அந்த காணொளி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் காணொளியைப் பார்த்தேன். அதில் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்கிறார். அது பார்ப்பதற்கே புதிதாக இருந்தது. அவருடன் நான் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்து நான் பார்த்ததில்லை. அவர் விளையாடி நீண்ட நாள் ஆகிவிட்டதால் செய்து பார்த்திருப்பார். ஏதோ ஒரு சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசுவதை பார்க்க முடிந்தது. ஒருவேளை பந்துவீச்சாளர்களை சோதித்து பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.