ஐ.பி.எல்-இன் அதிகாரப்பூர்வ பார்ட்னராக அன்அகாடமி நிறுவனத்தை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அன்அகாடமியானது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இணையத்தள கல்வி நிறுவனம் ஆகும்.
கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 19 -ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக அன்அகாடமியை மூன்று ஆண்டுகளுக்கு பி.சி.சி.ஐ நியமித்துள்ளது. இதுகுறித்து ஐ.பி.எல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் அதிக நபர்களால் பார்க்கப்படும் ஒரு தொடராகும். இணையத்தள கல்வி நிறுவனமான அன்அகாடமி பார்வையாளர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நல்ல உத்வேகத்தைத் தரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்அகாடமியின் துணைத்தலைவர் கரண் ஷ்ரா இது குறித்து கூறும் போது, "ஐ.பி.எல்-இன் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இணைவதில் மகிழ்ச்சி. அன்அகாடமியானது பல புதுமையான முயற்சிகளுடன் செயல்படக்கூடிய ஒரு தளமாகும். இந்த வாய்ப்பின் மூலம் அன்அகாடமியை இந்தியாவில் மிகப்பெரியதாக மாற்றி, இணையத்தளத்தில் அதற்கான ஒரு பெயரை ஏற்படுத்த முடியும். இந்த வாய்ப்பை வழங்கிய பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு நன்றி" எனக் கூறினார்.