மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த அணியின் இந்த தோல்வி குறித்து ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், "நேற்றிரவு கோடிக்கணக்கான இதயங்கள் உடைந்திருந்தாலும் எங்களின் அன்புக்கும் மரியாதைக்கும் எப்போதும் தகுதியானவர்கள் நீங்கள் (இந்திய அணியினர்). மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். சிறப்பான வகையில் வெற்றியை பெற்ற நியுசிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.
அதேபோல பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், "இது ஏமாற்றத்தை அளிக்கக் கூடிய முடிவுதான். ஆனாலும் இந்திய அணி, கடைசி வரை தொடர்ந்து தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது. உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முழுவதும் இந்தியா நன்றாக விளையாடியது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்துமே சிறப்பாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதியே. இந்திய அணியின் வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.