16 ஆவது ஐபிஎல் சீசனின் 26 ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கெயில் மேயர்ஸ் 51 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 44 ரன்களையும் பட்லர் 40 ரன்களையும் எடுத்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசும் போல்ட் 5 முறை முதல் ஓவரை வீசி இதுவரை 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இதில் 5 விக்கெட்களையும் எடுத்துள்ளார். மொத்தமாக 30 பந்துகளில் 26 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளார். நேற்றைய போட்டியில் முதல் ஓவரை மெய்டன் ஆக்கியதும் குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி தற்போது வரை 11 போட்டிகளில் முதலில் பேட் செய்து எதிரணிக்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் 9 முறை வெற்றி பெற்று 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த கடைசி 7 ஐபிஎல் போட்டிகளில் 6ல் இரண்டாவது பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் மட்டுமே ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
முதல் 11 ஓவர்களை சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணி இறுதி 9 ஓவர்களில் நிலை குலைந்தது. 11 ஓவர்களில் விக்கெட்கள் இழப்பின்றி 81 ரன்களைக் குவித்திருந்தது. 12 முதல் 17 வரையிலான இடைப்பட்ட 5 ஓவர்களில் அந்த அணி மொத்தமாக 32 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்களை இழந்திருந்தது. 18 முதல் 20 வரையிலான இறுதி 3 ஓவர்களில் 31 ரன்களை எடுத்து 2 விக்கெட்களை இழந்திருந்தது.
நேற்றைய போட்டியில் ராகுல் கொடுத்த 2 கேட்ச்களை ராஜஸ்தான் அணி வீரர்கள் தவற விட்டனர். முதல் கேட்சினை ஜெய்ஸ்வாலும் இரண்டாவது கேட்சினை ஹோல்டரும் தவறவிட்டனர். நேற்றைய போட்டியில் லக்னோ அணி விக்கெட்கள் இழக்காமல் இருந்தும் பவர்ப்ளேவில் குறைவான ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.