16 ஆவது ஐபிஎல் சீசனின் 38 ஆவது லீக் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மேய்ர்ஸ் 54 ரன்களையும் ஆயுஸ் படோனி 43 ரன்களையும் ஸ்டோனிய்ஸ் 72 ரன்களையும் பூரான் 45 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் அணியில் ரபாடா 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மேயர்ஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்த போட்டியில் லக்னோ அணி குவித்த 257 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. முதல் இடத்தில் பெங்களூர் அணி புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 263 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. லக்னோ அணி பெங்களூர் அணியைவிட 6 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது. இந்த போட்டியில் லக்னோ அணி அதிக பவுண்டரிகள் விளாசிய அணிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி 24 ஃபோர்கள், 14 சிக்ஸர்கள் என மொத்தம் 41 பவுண்டரிகளை அடித்துள்ளது. முதல் இடத்தில் பெங்களூர் அணி உள்ளது. இந்த அணி 21 ஃபோர்கள் 21 சிக்ஸர்கள் என 42 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
258 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தாலும் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக அதர்வா டைட் 66 ரன்களையும் சிக்கந்தர் ராசா 36 ரன்களையும் லிவிங்ஸ்டன் 23 ரன்களையும் ஜிதேஷ் சர்மா 24 ரன்களையும் எடுத்தனர். லக்னோ அணியில் பூரான் ராகுலைத் தவிர அனைத்து வீரர்களும் பந்து வீசினர். இதில் யஷ் தாக்கூர் 4 விக்கெட்களையும் பிஷ்னோய் 2 விக்கெட்களையும் நவீன் உல்-ஹக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.