உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தநிலையில், இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இந்த இறுதிப்போட்டி குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலிலளித்துள்ள புஜாரா, "இப்போது டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது விளையாடுதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. டெஸ்ட் மட்டுமே விளையாடுவோருக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது பெரிய விஷயமாகும். மேலும், அணியில் உள்ள அனைவருக்கும் இது பெரிய விஷயமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மற்ற ஒருநாள் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பைகளின் இறுதிப்போட்டிகளைப் போலவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் பெரியது" என கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது போட்டி நடைபெறுவது நியூசிலாந்திற்கு சாதகமானதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த புஜாரா, "இறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடும் அணி, ஐந்து நாட்களும் அதன் திறனுக்கு ஏற்றவாறு விளையாட உறுதிப்பூண்டுள்ள அணி கோப்பையை வெல்லும் . எனவே, ஒரு அணியை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக நான் பார்க்கவில்லை. போட்டி நடுநிலையான இடத்தில் விளையாடப்படுகிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். எங்களிடம் தரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ளது" என் தெரிவித்தார்.
இந்தியாவிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால்தான் புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் போட்டிகளை நடத்த எதிரணிகள் விரும்புவதில்லையா எனவும் புஜாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "தாங்கள் புற்கள் நிறைந்த பிட்ச்சைக் கொடுத்தால், தங்களின் பேட்டிங் வரிசையும் சோதிக்கப்படும் என்பது தற்போது அணிகளுக்குத் தெரியும். அவர்களால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நாட்களில் பெரும்பாலான அணிகள் பந்து வீச்சாளர்களுக்குப் போதுமான அளவு கைகொடுக்கும் நியாயமான ஆடுகளத்தைத் தேர்வு செய்கின்றன. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கும் அது சாதகமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.