நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக விளையாடியவர் தீபக் சகார். 12 போட்டிகளில் களமிறங்கிய அவர், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றியில் பங்குவகித்தார். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார். இந்திய ஏ அணியில் அவர் சிறப்பாக செயல்பட்டதே இந்த வாய்ப்புக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் கிரிக்கெட் விளையாடவே லாயக்கில்லாதவர் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டது தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது கருத்துகளை ஆகாஷ்வானி என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதன்படி, தீபக் சகார் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தீபக் சகாரின் கதை சுவாரஸ்யமானது. அவர் இளம்வயதில் ராஜஸ்தானின் அனுமாங்கர் பகுதியில் பயிற்சிக்காக வந்திருந்தார். ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடெமியின் இயக்குனராக இருந்த கிரேக் சேப்பல் சகாரை கிரிக்கெட்டைக் கைவிட்டுவிடுமாறு கூறினார். அதற்குக் காரணமாக அவர் சொன்னது, உன்னால் வாழ்நாளில் கிரிக்கெட்டராகவே ஆகமுடியாது என்பதுதான்.
ஆனால், சகார் தனது ஏற்ற இறக்கங்களை சரிசெய்தார். கிரிக்கெட்டை முறையாக கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இன்று இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளார் என சுவாரஸ்யமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து தொடருக்காக சென்ற இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் உண்டான வெற்றிடத்தை, தீபக் சகார் பூர்த்தி செய்துள்ளார்.